ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - திரைவிமர்சனம்
அறுசுவையில் நகையும் ஒருசுவையாக நம் முன்னோடிகள் கூறியுள்ளனர். அதில் இருவகையுண்டு. கேளிக்கையாக நகை செய்வது ஒன்று, மற்றொன்று ஆபத்தான நிலையில் இருக்கும் போதும் நகைத்து பார்வையாளர்களை ஈர்ப்பது. இரண்டாவதை பிளாக் காமெடி என்று கூறுவர்.
அவ்வாறான படங்கள் தமிழ் சினிமாவில் கை விட்டு எண்ணும் எண்ணிக்கையில் மட்டுமே வந்துள்ளன. அவைகளில் சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மூடற்கூடம் போன்ற படங்கள் வெற்றி அடைந்தாலும், அனைத்து படங்களும் வெற்றியை தழுவி உள்ளனவா என்று கேட்டால் அதற்கான விடை கேள்விக்குறியே!
அந்த வரிசையில் இந்தபடமும் வந்துள்ளதா என்பதை "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" விவரிக்கிறது.
இந்த படத்தின் கதை கற்பனை (fantasy) பாணியில் அமைந்துள்ளது. படத்தின் மையக்கதை, பல்லண்டத்தில் பல்லாரயிரக்கணக்கான காலக்சியில் ஒன்றான மில்கிவே காலக்சியில் உள்ள பூமி என்னும் ஒரு கோளில் உள்ள ஆசிய கண்டத்தில், இந்திய நாட்டில் உள்ள ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், ஒரு குக்கிராமமான எமசிங்கபுர(ம்)த்தில் தான் நடக்கவுள்ளது என்று முதலில் கொஞ்சம் பில்ட் அப்போடு தான் கதை ஆரம்பிக்கிறது.
அங்கு உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தின் படி தனி கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள். திருடுவதை குலத்தொழிலாக வைத்துள்ளார்கள். அந்த கிராமத்தின் தலைவன் எமன். அவனோடு புரூசோத்தமன், நரசிம்மன் என்று இருவரும் சேர்ந்து சென்னையில் படிக்கும் ஒரு பெண்ணை கடத்துவத்திலே முதல் பாதி நகர்கிறது.
அந்த பெண்ணின் காதலன், அந்த பெண்ணை தேடி எமசிங்கபுரத்திற்கு வந்து மாட்டிக்கொண்டு தவிப்பதும், எமன் அந்த பெண்ணை ஏன் கடத்தினார் ? இதற்கு பின்னர் உள்ள கதை என்ன? என்பதை விளக்குவதே இரண்டாம் பாதி.
படத்தின் பலம் என்று சொல்ல நேர்ந்தால், படத்தின் திரைக்கதை, காமெடி, பின்னணி இசை, விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பு,
கலை மற்றும் ஒளிப்பதிவு (இரண்டாம் பாதியில்).
படத்தின் குறை என்று சொல்ல நேர்ந்தால் படத்தின் கதை, பாடல், லைட்டிங் மற்றும் பலம் என்று சொன்ன அதே கமெடி என்று சொல்ல நேரிடும்.
மேலும் விமர்சிக்கும் முன்னர் ஒரு சிறிய பதிவு..
இந்த படத்தின் டீசரில் நாம் ராமாயண குறிப்பு வசனத்தை கண்டிருப்போம். அது பின்வரும் link -ல் பார்க்கலாம்..
"ராவணன் சீதையை கடத்தி சென்றாலும் கை படாமல் வைத்திருந்தான். நாம் அவனை அரக்கன் என்கிறோம். ஆனால் ராமன் சீதையை காப்பாற்றினாலும் சந்தேக தீயில் போட்டு எரித்தார்.. அவரை கடவுள் என்கிறோம்.. இதில் நல்லவன் ராமனா? ராவணனா?" என்று எமன் கேட்டாலும், புரூசோத்தமன் மற்றும் நரசிம்மன் அவரவர் கருத்தை எடுத்து வைத்தாலும் , கடைசியில் "இந்த கதையில் ராமனும் நான்தான் ராவணனும் நான்தான்" என்று எமன் கூறும் வகையில் அந்த வசனம் அமைந்திருக்கும்.
அந்த பதிவை பல சர்ச்சைகளுக்கு உள்ளாக்கி சென்சார் கட்டில் தூக்கி விட்டார்கள். கடைசியில் ராவணன் குப்பன் ஆகிவிட்டான் ராமன் சுப்பன் ஆகி விட்டான்.நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பதை ஒருமுறை உங்களுகெல்லாம் நியாபகப்படுத்த விரும்புகிறேன்..
அந்த பதிவை கண்டிக்கும் அளவிற்கு அது ஒரு அழுத்தமான பதிவாகவும் அந்த படத்தில் இல்லை. அது இயக்குநரின் தனிமனித கருத்து சுதந்திரம். ராவணன் என்று தலைப்பை வைத்து படம் எடுக்கும் போது இல்லாத சர்ச்சை ஒரு சிறிய வசனத்தில் வந்துள்ளதை பார்த்து நம் கருத்து சுதந்திரம் அடக்கி ஆளப்பட்டு வருகிறது என்பதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.
சரி, விமர்சனத்திற்கு வருவோம். படத்தின் கதை கற்பனை களத்தில் அமைந்திருந்தாலும், இயக்குநர் பல புதிய முயற்சிகளை கையாண்டுள்ளார் என்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது. திரைக்கதை முதல் பாதியில் தெளிவில்லாமல் நகர்ந்தாலும், அதன் விளக்கத்தை முற்றும் புதிதான ஒரு கிராமத்தில் விளக்கி விடுகிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.
படத்தின் முதுகெலும்பு என்று சொல்ல நேர்ந்தால் அது பின்னணி இசையை. மிகவும் சோர்வான இடங்களில் கூட பின்னணி இசையின் மூலமாக கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். பாடல்கள் கொஞ்சம் சுமாரகவே உள்ளது.
படத்தின் முதல் பாதியில் கொஞ்சம் சோதப்பல்களாகவே தெரிந்த ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் அதுவே பக்கபலத்தையும் கூடுகிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணனுக்கு வாழ்த்துக்கள்.
படத்தொகுப்பை மிருதுவான முறையில் கையாண்டுள்ளார் கோவிந்தராஜ். FCP-ல் (software) கைதேர்ந்தவராகவே இருக்கவேண்டும். இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஓரிரு காட்சிகளை நீக்கி இருக்கலாம்.
படத்தின் பல இடங்களில் டானியல் போப் அவர்களின் கமெடி கைகூடி வந்தாலும், சில இடங்களில் மொக்கை வாங்குவதும் மறுக்கமுடியாத உண்மை தான். ரமேஷ் திலக் அவர்களின் காமெடி காட்சிகள் சிறிய அளவில் இருந்தாலும் நன்றாக கைகூடியுள்ளது. ராஜ்குமார் தனது நடிப்பை நேர்த்தியாக கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
விஜி சந்திரசேகர், காயத்ரி, நிகாரிக்கா ஆகிய அனைவரும் தங்களது பாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை தந்துள்ளார்கள். கௌதம் கார்த்திக் படந்தோறும் ஒரு கதாபாத்திர அமைப்பை கையாண்டுள்ளார். ஓரிடத்தில் எமன் இவர் பாத்திரத்தை பார்த்து " உனக்கென்ன மௌன ராகம் கார்த்திக் ன்னு நினைப்பா… ?" என்று கேட்கும்போது, இன்னும் அதற்கு நாட்கள் உள்ளன என்று சொல்ல தோன்றியது.
விஜய்சேதுபதி தனது எமன் கதாபாத்திரத்திற்கு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார். அந்த பெண்ணை கடத்தும் போது அவர் கண்ணில் தெரியும் கோபமும் , "அவள் அசிங்கமாக இருந்து இருந்தாலும் அவளை கடத்தி இருப்பேன்" என்று கூறும் போது அவர் கண்ணில் தெரியும் நியாயமும் அவர் நடிப்பை மேலும் ஒரு ஜான் ஏற்றி நிறுத்துகிறது.
மொத்தத்தில் இந்த படம் இந்த வாரகடைசியில் குடும்பத்துடன் ஒருமுறை திரையரங்கிற்கு சென்று பார்க்க இயலும் ஒரு படமே...
இருந்தாலும்,இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னொரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இயக்கப்படலாம் என்று கூறும்போது கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக